மன அழுத்தம் குறைந்து உங்கள் மனம் லேசாக உதவும் '30 விநாடி பயிற்சி'
நீங்கள் சமாளிக்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தால் திணறுவதாக உணர்ந்தால், உங்கள் நலனை மேம்படுத்தும் வகையில் எளிய, குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய "மைக்ரோ பயிற்சிகளை" செய்து பார்க்கலாம்.
ஆய்வாளர் ஒருவருடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருக்கிறேன், அப்போது என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சிரித்துக்கொண்டிருக்கிறேன். என் முகம் சுருங்கும் அளவுக்கும் வயிறு வலிக்கும் அளவுக்கும் சிரித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும், என்னால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை.
நெதர்லாந்தில் உள்ள டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான நடாலி வான் டெர் வாலுடன் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் இருவரும் குறுகிய நேர "சிரிப்பு யோகா" பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். வழக்கமான யோகாவைப் போலவே, இது சுவாசப் பயிற்சியுடன் தொடங்குகிறது. அதன் பிறகு, செயற்கையாகச் சிரிக்கும்படி ஒருவர் வழிநடத்தப்படுகிறார்.
"சிறிது நேரத்துக்குப் பிறகு, அந்தச் சிரிப்பு பெரும்பாலும் உண்மையான சிரிப்பாக மாறிவிடும்," என்கிறார் வான் டெர் வால்.
காலை 5 மணிக்கான தியானப் பயிற்சிகள் முதல் கடும் குளிர்காலத்தில் பனிக்கட்டி போன்ற குளிர்ந்த நீரில் நீந்துவது வரை, இன்றைய சுயபராமரிப்பு டிரெண்டுகளுக்கு அதிக நேரம் தேவைப்படலாம். ஆனால், இது அவசியமில்லை என்பதைப் பல்வேறு ஆய்வுகள் தற்போது காட்டுகின்றன. குறுகிய நேரம் செய்யக்கூடிய எளிய செயல்பாடுகள் நமது மனநிலை, நல்வாழ்வு மற்றும் ஆற்றலை மேம்படுத்தக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.
"மைக்ரோபிராக்டிஸ்" என்ற நூலின் ஆசிரியர் எலி சஸ்மன் கூறுகையில், சில பயிற்சிகளை வெறும் 30 விநாடிகளில் செய்துவிட முடியும். இவைதான் "மைக்ரோ பயிற்சிகள்". இவற்றில் சிலவற்றை நீங்கள் இப்போதே முயற்சித்துப் பார்க்கலாம்
சிரிப்பு யோகா என்பது நகைச்சுவை இல்லாமலேயே சிரிப்பைத் தொடங்குவதை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, இதில் சிரிப்பு இருக்கும்; ஆனால் சிரிக்க வைக்கும் நகைச்சுவை இருக்காது.
முதலில், நான் செயற்கையாகச் சிரிப்பது சற்று சங்கடமாக இருந்தது. ஆனால், அந்த உணர்வு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிரிப்பு பயிற்சி முடிந்த பிறகு, நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். எங்களது உரையாடலும் எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்தது. இதை நான் வான் டெர் வாலிடம் கூறியபோது, அவரும் மீண்டும் சிரித்தார்.
