சிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரி யாழ்.நகரில் கவனயீர்ப்பு
"பாலியல் கொடுமைக்கு கடுமையான, உடனடித் தீர்வு வேண்டும்"
யாழ். சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் ஆறு வயதுச் சிறுமி ரெஜினா பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், சிறுமியின் படுகொலைக்கு நீதி கோரியும் யாழ். நகரில் இன்று (29) வெள்ளிக்கிழமை முற்பகல் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 09.30 மணி முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படடது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மகளிர் அபிவிருத்தி நிலைய அங்கத்தவர்கள், யாழ். மாவட்ட மகளிர் விவகாரக் குழு அங்கத்தவர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், யாழ். மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அருட்சகோதரிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் "ரெஜினாவுக்கு நீதி வேண்டும்", நேற்று வித்தியா இன்று ரெஜினா...நாளை???", "கல்வியமைச்சரே மாணவரின் பாதுகாப்பை உறுதி செய்க", " பொலிஸ் அதிகாரிகளே கிராமப்புறங்களைப் புறக்கணியாதீர்!", "பெண்களைச் சீரழிக்கும் காமுகக் கும்பல் ஒழிக!", "அரசியல்வாதிகளே மக்களைத் திரும்பிப் பாருங்கள்", "காட்டுப்புலம் என்ன கால்வைக்க முடியாத பகுதியா?" உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கி எதிர்ப்பில் ஈடுபடடனர்.
அத்துடன் போதைப்பொருளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறும், பாலியல் ரீதியான கொடுமைகளைப் புரிவோருக்கு கடுமையான, உடனடித் தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தினர்.
