கிளிநொச்சி புதையல் தோண்டியவர் கைது
கிளிநொச்சி அறிவியல் நகர் காட்டுப்பகுதியில் நவீன ஸ்கானர் இயந்திரத்தை பயன்படுத்தி இரண்டு பேர் புதையல் தேடுவது தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சுற்றிவளைப்பின் போது ஒருவர் தப்பியோடியுள்ளார். இவர்கள் பயன்படுத்திய சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன ஸ்கானர் இயந்திரமும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கருவியும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் நேற்று கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்ற வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இப் பகுதியில் விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொள்கலன் ஒன்று தொடர்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொலிசாரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு எதுவும் கிடைக்காத நிலையில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
